டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்

முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவாிைச பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் நம்பர் ஒன் இடத்தை இழந்து இருக்கிறார்.

முழங்கை காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாடாததால் 9 புள்ளிகளை பறிகொடுத்த வில்லியம்சன் (886 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (891 புள்ளி) மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறினார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் (878 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்காத இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (797 புள்ளி) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (814 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர்கள் ரிஷாப் பண்ட், ரோகித் சர்மா (தலா 747 புள்ளி) கூட்டாக 6-வது இடத்தில் தொடருகின்றனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (850 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (412 புள்ளி) முதலிடத்திலும், இ்ந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (386 புள்ளி) 2-வது இடத்திலும், ஆர்.அஸ்வின் (353 புள்ளி) 4-வது இடத்திலும் தொடருகின்றனர்.

Sharing is caring!