யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அசத்தலாக ஆடிய ஸ்பெயின் அணி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணியின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. அந்த அணி 5 கோல் அடித்து அசத்தியது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் பெட்ரி சுய கோல் அடித்தார். இதனால் குரோஷியாவுக்கு முதல் கோல் வந்தது.

அதன்பின், ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயின் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. அந்த அணியின் பாப்லோ சராபியா 38-வது நிமிடத்திலும், சீசர் 57-வது நிமிடத்திலும், பெர்ரன் டோரஸ் 76-வது நிமிடத்திலும் கோலடித்து முன்னிலை தேடிக் கொடுத்தனர். கடைசி 5 நிமிடத்தில் குரோஷியா 2 கோல்களை போட்டது. அந்த அணியின் மிஸ்லாவ் ஒர்சிச் 85-வது நிமிடத்திலும், மரியோ பாசாலிச் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதனால் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஸ்பெயின் வீரர்கள் அல்வரோ மோராடா 100-வது நிமிடத்திலும், மிகெல் 103-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

இறுதியில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இன்று அதிகாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் 57, 59 மற்றும் 75-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சுவிட்சர்லாந்து 81 மற்றும் 90-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தது. இதனால் ஆட்டம் 3-3 என சமனிலை வகித்தது.

வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி கார்னார் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து அணி 5-4 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Sharing is caring!