ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பை; ஐசிசி அறிவிப்பு

ஐ.சி.சி. அறிவிப்பு… ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபா் – நவம்பா் காலக்கட்டத்தில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி தெரிவித்தாா்.

முன்னதாக, போட்டியை நடத்துவது தொடா்பாக பிசிசிஐக்கு ஐசிசி 4 வார அவகாசம் வழங்கியதை அடுத்து இந்த முடிவே பரவலாக ஊகிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ உறுதி செய்தது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என ஐசிசி நேற்று அறிவித்துள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும்.

முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியாவின் சார்பாகவே இப்பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!