இதுதான் நங்கூரமாய் நின்று விளையாடுவதோ…. 278 பந்தில் 37 ரன் எடுத்து அணியை காப்பாற்றிய ஹசிம் அம்லா

ஹசிம் அம்லா 100 பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 6 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்று அணியை டிரா செய்ய வைத்தார்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹசிம் அம்லா. இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதிரடியாகவும், அதேநேரத்தில் அணிக்கு தேவை என்றால் தடுப்பட்டம் ஆடுவதில் கில்லாடி.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். குரூப் 2, சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹம்ப்ஷைர்- சர்ரே அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஹம்ப்ஷைர் 488 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 72 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஹசிம் அம்லா 29 ரன்களும், ரியான் பட்டேல் 11 ரன்களும் சேர்த்தனர்.

பாலோ-ஆன் ஆன சர்ரே, 2-வது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. 6 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சர்ரே. அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். போட்டியில் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட அம்லா, எப்படியும் போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். தடுப்பாட்டம் என்றால் அப்படியொரு தடுப்பாட்டம். முதல் 100 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். 126-வது பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார்.

381 நிமிடங்கள் களத்தில் நின்று 278 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. 104 ஓவர்களை சந்தித்த சர்ரே அணி 8 விக்கெட்டை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. சுமார் 6 மணிநேரம், 21 நிமிடங்கள் களத்தில் போராடி அணியை டிராவில் முடித்து வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 13.30 ஆகும்.

இது அவரின் மிகச்சிறந்த மெதுவான ஆட்டம் இல்லை. 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் டி வில்லியர்ஸுடன் இணைந்து போட்டியை டிராவாக்க போராடினர். 244 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டிரைக் ரேட் 10.24 ஆகும். இதுவே அவரின் மிகக்சிறந்த தடுப்பாட்டமாகும். இந்த போட்டியில் டி வில்லியர்ஸ் 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் போட்டியை டிரா ஆக்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Sharing is caring!