தோல்விக்கு என்ன காரணம்; இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் விளக்கம்

இங்கிலாந்து கேப்டன் பேட்டி… கடைசி நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்டதே இந்திய அணியுடனான தோல்விக்கு மிக முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி 20 போட்டி நடைபெற்றது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (12), கே.எல் ராகுல் (14) மற்றும் விராட் கோலி (1) போன்ற சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அறிமுக வீரரான சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்து கொடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.

சூர்யகுமார் யாதவை போல் ரிஷப் பண்ட் 30 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 37 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 185 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாஸ் பட்லர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஜேசன் ராய் 40 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் (46) மற்றும் ஜானி பாரிஸ்டோ (25) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், கடைசி ஒரு ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

இந்திய அணி அசால்டாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரியும், மூன்றாவது பந்தில் சிக்ஸரும் அடித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் மிரட்டினார். கடைசி மூன்று பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர் 2 வொய்ட் வீசி ரசிகர்களை பரபரப்பிற்பின் உச்சிக்கே கொண்டு சென்றார்.

4வது பந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தேவை இல்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடியதால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், கடைசி நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை மிக விரைவாக இழந்துவிட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!