உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு காரணமாக இந்த போட்டி இந்தியாவில் அரங்கேறுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவல் சூழ்நிலையை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி 20 ஓவர் உலக கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் ஏற்றுக்கொண்டது. இதன்படி இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து முடிவை வருகிற 28-ந் தேதிக்குள் தெரிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 20 ஓவர் உலக கோப்பைபோட்டி குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஐ.சி.சி. திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடக்க சுற்று ஆட்டங்களை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முறைப்படி கேட்டது. என்றாலும் போட்டிக்குரிய உரிமத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியதே தவிர இந்த போட்டி அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிரிக்கெட் வாரியம் கவலைப்படவில்லை. எஞ்சிய ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ‘பிட்ச்’ தயாராக 3 வார காலம் இடைவெளி தேவைப்படும். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் ஆட்டங்களை அமீரகத்தில் நவம்பர் மாதத்தில் தான் தொடங்க முடியும். அதற்கு முன்னதாக தொடக்க சுற்று ஆட்டங்கள் ஓமனில் ஒரு வாரம் நடைபெறும்.

தற்போது இந்தியாவில் ஒருநாளைக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு தான். எனவே அக்டோபரில் தொடங்கும் உலக கோப்பை போட்டியின் போது கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த மாதத்திலேயே எப்படி கணிக்க முடியும். கொரோனா 3-வது அலை வந்தால் என்ன செய்ய முடியும். எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை செப்டம்பரில் இங்கு நடத்த முடியாமல் அமீரகத்துக்கு மாற்றி இருக்கும் போது 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை எப்படி இந்தியாவில் நடத்த முடியும்.

அத்துடன் கொரோனா சூழ்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர் இந்தியா வந்து விளையாட ஆர்வம் காட்டுவார்கள். அமீரகத்தில் நடைபெறும் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள். அதேநேரத்தில் அங்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் நடந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள்’ என்று தெரிவித்தார்.

Sharing is caring!