மல்யுத்தம்- இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேற்றம்

சுவீடன் வீராங்கனையை 7-1 என எளிதாக வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று காலை நடைபெற்றன. ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்- சோபியா மேக்டலினா (சுவீடன்) மோதினார்கள்.

ஆறு நிமிடம் கொண்ட போட்டியில் முதல் மூன்று நிமிடங்களில் சுவீடன் வீராங்கனையை மடக்கி வினேஷ் போகத் 2,2,1 என புள்ளிகள் பெற்று 5-0 என முன்னிலை பெற்றார். 2-வது மூன்று நிமிடங்களில் மேலும் 2 புள்ளிகள் பெற்றார். சுவீடன் வீராங்கனையால் ஒரு புள்ளி மட்டுமே பெற முடிந்தது.

இதனால் வினேஷ் போகத் 7-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெறும் காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை கலாட்ஜின்ஸ்கயாவை எதிர்கொள்கிறார்.

Sharing is caring!