ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்!!!

சாம்சங்கின் புதிய திட்டம்… ஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக சாம்சங் புதிய அம்சத்தினை உருவாக்கி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஃபைல் ஷேரிங் சேவைகள் அதிக பிரபலமாகி வருகின்றன. தரவுகளை பகிர்ந்து கொள்ளும் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பயனர்கள் விரும்பியவற்றை தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.

அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டிராப் சேவை ஆப்பிள் பயனர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவன சேவைக்கு போட்டியாக சாம்சங் நிறுவனமும் சொந்தமாக ஃபைல் ஷேரிங் சேவையை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங்கின் ஃபைல் ஷேரிங் சேவை க்விக் ஷேர் எனும் பெயரில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சேவையை கொண்டு பயனர்கள் இரு கேலக்ஸி ஸ்மார்ட்போன்களிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

க்விக் ஷேர் கொண்டு பயனர்கள் யாருடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் யாரிடம் இருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். சேவையில் ஸ்மார்ட்போனில் உள்ள கான்டாக்ட்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள கான்டாக்ட்ஸ் ஒன்லி எனும் ஆப்ஷனும் அனைவருடன் பகிர்ந்து கொள்ள எவ்ரிவொன் என இரண்டு ஆப்ஷன்களை வழங்கப்படுகிறது.

மேலும் பயனர்கள் சாம்சங் ஸ்மார்ட்திங்ஸ் சாதனங்களுக்கும் தரவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது, தரவுகள் சாம்சங் கிளவுடில் அப்லோட் செய்யப்பட்டு பின் அதற்கான ஸ்மார்ட்போனில் ஸ்டிரீம் செய்யப்படும். ஸ்மார்ட்திங்ஸ் சாதனத்திற்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 2 ஜி.பி. அளவிலான டேட்டாவையும், அதிகபட்சமாக ஒரே சமயத்தில் 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை மட்டுமே அனுப்ப முடியும்.

புதிய க்விக் ஷேர் அம்சம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு, மென்பொருள் அப்டேட் மூலம் மற்ற சாதனங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!