இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது

‘பாலியல் பலாத்கார புகார் உட்பட, பல்வேறு சிக்கல்களில், ‘ஸ்வீடிஷ் அகாடமி’ சிக்கியுள்ளதால், இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் மற்றும் நார்வேயைச் சேர்ந்த அகாடமி, கலை, இலக்கியம், அமைதி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், விருதுக்குரியவரை, ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கும். அதன்படி, 2018ம் ஆண்டுக்கான விருதுக்குரியோர், அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு உரியவரைத் தேர்வு செய்யும், ‘ஸ்வீடிஷ் அகாடமி’ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதனால், ‘இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அடுத்த ஆண்டு சேர்த்து வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்வீடிஷ் அகாடமியில், இலக்கியத் துறையைச் சேர்ந்த, 18 நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர்.

அவர்கள் தான், நோபல் பரிசுக்குரியவரை தேர்ந்தெடுப்பர்.இந்தக் குழுவின் உறுப்பினரான கதாரினா புரோஸ்டென்சனின் கணவரான, 72 வயதாகும், ஜீன் கிளாட் அர்னால்ட் மீது, சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கிடையே, மொத்தமுள்ள, 18 நிரந்தர உறுப்பினர்களில், ஆறு பேருக்கு வயதாகி விட்டதால், அவர்கள், அகாடமி பணிகளில் பங்கேற்பதில்லை.

அகாடமிக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி, இரண்டு பேர் சமீபத்தில் விலகினர்.அகாடமியின் முடிவுகளை எடுக்க, 12 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், பெரும்பான்மை பலம் இல்லை.

அதனால், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது, நடைமுறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 1901ம் ஆண்டு முதல், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன், 1949ல், வழங்க வேண்டிய விருது, 1950ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு, 68 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, விருது வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!