உங்களின் தரவுகளை காசாக்கும் பேஸ்புக் : எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?

தரவுகளை காசாக்கும் பேஸ்புக்..

உலகின் முதன்மை சமூக வலைத்தள பக்கமான பேஸ்புக் நமது தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்தி எவ்வாறு பில்லியன் கணக்கிலான டொலர்களை வருவாயாக ஈட்டுகிறது என்பது வெளியுலகில் அதிகமாக அறியப்படாத ஒன்று.

பேஸ்புக்கின் பிரமாண்டமான தரவு சேவையகத்திலேயே நமது அனைத்து தரவுகளும் சேமிக்கப்படுகின்றன. நமது தனிப்பட்ட தரவுகள் மட்டுமின்றி, ஒவ்வொருமுறை நாம் பேஸ்புக்கில் என்னென்ன பதிவேற்றுகிறோம் உள்ளிட்ட அனைத்தும் இந்த சேவையகத்தில் சேமிக்கப்படுகிறது.

வாரம் ஒன்றிற்கு பேஸ்புக்கின் உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த பயனாளர்களால் 14 பில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. பேஸ்புக்கின் இந்த பிரம்மாண்ட சேவையகமானது மொத்தமாக அமெரிக்காவில் அமைந்துள்ள நான்கு கால்பந்து மைதானத்திற்கு ஒப்பானது.

இதேப்போன்று பேஸ்புக் நிறுவனத்திற்கு என உலகெங்கிலும் 15 பிரம்மாண்ட சேவையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 15 சேவையகமும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த சேவையகங்களில் நமது லைக்குகள், நமது நடந்த நாட்களின் நினைவலைகள் என அனைத்தும் சேமிக்கப்படுகின்றன.

இந்த தரவுகளே உரியமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, நாள்தோறும் பேஸ்புக்கில் நாம் என்ன பார்க்க வேண்டும், எந்த காணொளிகளை காண வேண்டும் என முடிவு செய்கிறது.

மேலும், எந்தவகையான காணொளிகளை நாம் விரும்புகிறோம் என்பதை ஆய்ந்தறிந்து, அதையே நமக்கு பின்னாளில் பரிந்துரைகளாக வழங்குகிறது.

இந்த தரவுகளே பேஸ்புக் நிறுவனத்திற்கு வருவாயை ஈட்ட பயன்படுகிறது, விளம்பர நிறுவனங்களுக்கு அந்த தரவுகளையே விற்பனை செய்கிறது. இதுவே பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டில் மட்டும் 55.8 பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்ட காரணமாக அமைந்தது.

பேஸ்புக் நிறுவனத்தின் சேவையகமே உலகின் தனிப்பட்ட தரவுகளின் மிகப்பெரிய பெட்டகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் பேஸ்புக் அதை ஒரு தார்மீக பொறுப்புடன் கையாள்கிறது.

Sharing is caring!