ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம்….விண்வெளி சொகுசு ஹோட்டல் தயார்

உலகின் பல்வேறு நாடுகளில், பல வசதிகள் உடைய சொகுசு விடுதிகள் இருந்தாலும், புவி ஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில், அந்தரங்கத்தில் தொங்கிய படி, விண்வெளியை ரசித்துக் கொண்டே, நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவித்தால் எப்படி இருக்கும்…! ஆம்… மனிதர்களின் இந்த கனவு விரைவில் நிஜமாகப்போகிறது.

அமெரிக்காவை சேர்ந்த, ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம், பூமியின் மேற்பரப்பிலிருந்து, 321 கி.மீ., தொலைவில் விண்வெளியில், மிதக்கும் சொகுசு ஹாேட்டல் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு அரோரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து, அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது: ‛‛விண்வெளியில் சொகுசு ஹோட்டல் என்றால், அது நிச்சயம் அனைவரையும் முதலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ஆனால், நிச்சயம் இது சாத்தியமே. விண்வெளி ஆய்வு கூடங்கள் விண்ணில் மிதப்பது போது, இந்த ஹோட்டலுக்கான தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புவியின் மேற்பரப்பிலிருந்து, 321 கி.மீ., தொலைவில்
அந்தரத்தில் இந்த ஹோட்டல் செயல்படும்.

இதில், ஆறு பேர் வரை தங்கும் வகையில் வடிவமைக்கப்படும். இங்கு செல்ல விரும்புவோர், 12 நாட்கள் விண்வெளியில் தங்கும் படி வசதி செய்து தரப்படும். புவிஈர்ப்பு விசையே இல்லாத இடத்தில், சொகுசு ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்பதால், இது ஒரு புது வித அனுபவத்தை தரும்.

இந்த மிதக்கும் ஹோட்டல், 90 நிமிடங்களில் பூமியை வலம் வந்துவிடும். எனவே, இங்கிருப்போர், 24 மணி நேரத்தில், 16 முறை சூரிய உதயத்தை காண முடியும். இது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.

2021ல் இந்த திட்டத்தை அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் செல்ல விரும்புவோருக்கு, அதற்கு முன், அடிப்படை பயிற்கள் வழங்கப்படும். இந்த ஓட்டலில், 12 நாட்கள் தங்க, ஒரு நபருக்கு, 67 கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!