கரண்ட் இல்லாமல் இயங்கும் பிரிட்ஜ்…. வரவேற்பு கிடைக்குமா!!!

வாஷிங்டன்:
பிரிட்ஜ் இருந்தால் போதும்… காய்கறி, நேற்று வைத்த சாம்பார், ரசம் வரை அதில் இடம் பிடித்து விடும். மின்சாரம் இல்லாவிட்டால் பிரிட்ஜ் கதி அதோ கதிதான். ஆனால் மின்சாரம் இல்லாமல் இயங்கும் பிரிட்ஜ் பற்றி உங்களுக்கு தெரியுங்களா?

மின்சாரம் இல்லாமல் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவிலுள்ள சோமர்வில்லியைச் சேர்ந்த, ‘பெனிக்’ அறிமுகப்படுத்தியுள்ளது.

‘யுமா- 6எல்’ என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது. இப்பெட்டியின் நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி வெளியேற ஆரம்பிக்கிறது.

இதனால், பெட்டிக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெப்பமும் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது. விளைவு? பெட்டிக்குள், 35 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ச்சி ஏற்படுகிறது. வழக்கமான மின்சார, ‘பிரிட்ஜ்’களின் உள்ளே ஈரப்பதம் வெகுவாக குறைந்திருக்கும்.

எனவே, தக்காளி, வாழைப்பழம், மிளகாய் போன்றவை சுருங்கி சுவையை இழக்கின்றன. ஆனால் யூமா – 6எல் சாதனத்தில் அது நேர்வதில்லை. மின்சாரம் துளியும் இல்லாமல் ஒரு வீட்டுக்குத் தேவையான உணவு காய்கறிகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்,

உலகெங்கும் குளிர்பதன வசதி இல்லாததால் மட்டும் 50 சதவீத உணவு கெட்டுப் போய் விடுகிறது. இதனால் நல்ல உணவை உண்ணும் வாய்ப்பு, 1.2 பில்லியன் பேருக்கு தினமும் மறுக்கப்படுகிறது. இதை வைத்துப் பார்த்தால், யூமா குளிர் பெட்டிக்கு நல்ல மவுசு இருக்கும் என்றே தோன்றுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!