காஷ்மீர் எல்லையைப் பிரச்சினைக்குரியதாகக் குறிப்பிட்ட கூகுள் வரைபடம்!

காஷ்மீர் எல்லைப் பகுதியை பிரச்சினைக்குரிய இடம் என்பதை குறிப்பிடும் வகையில் சிவப்புநிறக்க கோடுகளுடன் கூகுள் வரைபடம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து வரைபடத்தை பார்த்தால் சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பது தெரியாது.

ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு காஷ்மீர் எல்லையைக் கூகுள் வரைபடத்தை பார்க்கும் போது சர்ச்சைக்குரிய பகுதியாகக் காட்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இது காஷ்மீருக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் எல்லைகளும் திருத்தி வரையப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வோஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது.

வோஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ” கூகுள் ஒன்லைன் வரைபடத்தில் காஷ்மீர் அனைத்தும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், எல்லைப்பகுதி இந்தியாவில் இருப்பதாகவும் குறிப்பிட்டாலும் அதில் சிறு, சிறு கோடுகளாகச் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிட்டு அது சர்ச்சைக்குரிய, பரிச்சினைக்குரிய பகுதியாக மற்ற நாடுகளில் இருப்போர் பார்க்கும் போது தெரிகிறது.

உதாரணமாக இந்தியாவில் இருந்து கூகுள் ஒன்லைன் வரைபடத்தை ஒருவர் பார்க்கும்போது காஷ்மீர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று காண்பிக்கப்படுகிறது. அந்த நபர் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து கூகுள் ஒன்லைன் வரைபடத்தில் காஷ்மீரைப் பார்க்கும் போது அது பிரச்சினைக்குரிய பகுதியாகச் சிவப்பு வண்ணத்தில் காட்டப்படுகிறது.

நீங்கள் எந்த நாட்டில் இருந்து தேடுகிறீர்கள் அங்குள்ள பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியை மாற்றங்களுடன் காண்பிக்கிறது. இந்திய எல்லை மட்டுமல்லாமல் அர்ஜென்டீனீ முதல் அமெரிக்கா, ஈரான் வரை சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகள் அந்தந்த நாட்டில் தெரியாமல் வேறொரு நாட்டில் இருக்கும்போது பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதி தெரிகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “கூகுள் நிறுவனத்துக்கு நிலையான, சர்வதேச கொள்கை இருக்கிறது. அதன்படி பிரச்சினைக்குரிய பகுதிகளின் எல்லைகள், அம்சங்களை நியாயமான முறைப்படி அந்தந்த நாடுகள் கோரும் உரிமைக்கு ஏற்றார்போல் காண்பிக்கிறோம்.

இதன்படி எந்த பகுதியும் யாருக்கும் உரிமை அளிப்பதுபோல் இருக்காது. உள்நாட்டு டொமைனுக்கு ஏற்றார்போல் , சட்டங்களுக்கு ஏற்றார்போல் அந்தப்பகுதிகளைக் கூகுள் சித்தரிக்கிறது.

முடிந்தவரைக் கூகுள் பயன்பாட்டாளர்களுக்குத் தெளிவான, துல்லியமான வரைபடங்களை, சமீபத்திய விவரங்களுடன் காண்பிக்கிறோம். அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து எங்களுக்குக் கிடைக்கும் விவரங்கள் அடிப்படையில் எல்லைப்புறங்கள் குறித்துக் குறிப்பிடுகிறோம்” எனத் தெரிவித்தார்.

Sharing is caring!