கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஓர் அங்கமான கூகுள் பிளஸ் சேவை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்பின் பிரசார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம், முகநூல் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களைத் திருடி, அதன் மூலமாக அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு அவற்றை ட்ரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடப்பட்டு கண்காணிக்கும் பணி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளமான முகநூல் பயனாளர்களின் கணக்குகளில் பெரிய அளவு பாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முகநூல் நிறுவனம் கூறியது.

இதனிடையே மற்றொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் பயனாளர்களின் கணக்குகளைப் பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வைத் தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற அமெரிக்க நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு அடங்குவதற்குள் கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதுமான பயனார்களை ஈர்க்கத்தவறி விட்டதாலும், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருந்து வருவதாலும் கூகுள் பிளஸ் சேவை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!