கொரோனா தொற்றுதலை கட்டுப்படுத்த இலங்கை மாணவனின் அசத்தலான கண்டுபிடிப்பு – குவியும் வாழ்த்துக்கள்

கொவிட் -19 வைரஸ் காரணமாக, நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியைப் பேணும் செயற்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனமொன்றைக் கண்டுபிடித்து, மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவில் தொழில்நுட்பத் துறையைக் கல்விகற்று வரும் எம்.எம்.சனோஜ் அஹமட் என்ற மாணவன் சாதனை புரிந்துள்ளார்.

அரச, தனியார் நிறுவங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட அனைவரும் தமக்கிடையில் 1 மீற்றர் சமூக இடைவெளியை பேணிக் கொள்வதற்கு இந்த சாதனம் பெரிதும் உதவுகிறது.

இந்தச் சாதனம், சமூக இடைவெளி மீறப்படும்போது, ஒலியேழுப்பி கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், இரவு வேளைகளில் ஒளி எழுப்பி, சமிஞ்சை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் கிடைத்த ஒருசில உபகரணங்களைக் கொண்டு இந்த கழுத்துப்பட்டி தயாரிக்கப்பட்டுள்ளதால், இது பெரிதாகக் காட்சியளிப்பதாகவும் எனினும், இதே நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, கைக்கடிகாரம், அலுவலக அடையாள அட்டை, தலைக்கவசம், பென் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களிலும் செயற்படுத்த முடியுமெனவும் மாணவன் சனோஜ் அஹமட் தெரிவிக்கின்றார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் சமூக இடைவெளியை பேணுதல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. எனவே இம்மாணவனின் அரிய கண்டுபிடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடதக்கது.

Sharing is caring!