சீரடையும் ஓசோன் படலம் பழைய நிலைக்குத் திரும்பும்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை வீழ்ந்து விட்டது. இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சுக்கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து வருகிறது.

மேலும், பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பேரழிவுகளும் ஏற்படுகின்றன. எனவே, கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் நச்சு வாயுவை உருவாக்கும் இரசாயனப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் மூலம் ஓசோன் படலம் மேலும் பாதிப்படையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பொதுமக்களும் அதிக அளவில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் ஓசோன் படலம் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பழுதடைந்த ஓட்டை வீழ்ந்த நிலையில் இருக்கும் ஓசோன் படலம் விரைவில் சீரடையும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா.சபையின் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு 4 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

அதில் அண்டார்டிக்கா பகுதியில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை மெல்ல மெல்ல மூடி சீரடைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற 2060 ஆம் ஆண்டில் கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்தது போன்ற பழைய நிலை ஏற்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆண்டிற்குள் ஓசோன் படலத்தின் ஓட்டை 1 முதல் 3 சதவீதம் வரை குறைந்து சீரடைந்துள்ளது.

பூமியின் வடபகுதி மற்றும் மத்திய பகுதியில் 2030 ஆம் ஆண்டிலும், தென்பகுதியில் 2050 ஆம் ஆண்டிலும், அண்டார்டிகாவில் 2060 ஆம் ஆண்டிலும் முற்றிலும் சீரடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இரசாயனங்கள் குறிப்பாக குளோரோ புளோரோ கார்பன்களை தடை செய்ததால் தான் இத்தகைய முன்னேற்றமான நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!