செல்போன் கீழே விழுந்தாலும் இனி பாதிப்பில்லை..!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரின் கவலை போன் கீழே விழாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் இனி உங்கள் போன் கீழே விழுந்தாலும் அச்சப்பட தேவையில்லை என்கிறது இந்த புதிய கண்டுபிடிப்பு. இனி செல்ஃபோன் கீழே விழுந்தால் பயமில்லை.

ஸ்மார்ட்போன்கள் இன்றைய இளசுகளுக்கு கவச குண்டலமாகிவிட்டது. தூங்கும்போது, குளிக்கும்போது, சாப்பிடும்போது, சமைக்கும்போது என எந்த வேலை செய்தாலும் ஒரு கண்ணு ஸ்மார்ட்போன் மீதுதான் இருக்கும். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாகி விட்டது. ஆசை ஆசையாய் விலை அதிகம் கொடுத்து வாங்கும் செல்போன்கள், கைதவறி கீழே விழுந்தால் மனசு மட்டுமல்ல ஸ்மார்ட்போனும் நொருங்கிவிடும். அப்படி ஸ்மார்ட்போன் கீழே விழுந்துவிட்டால் டிஸ்பிளே ஸ்கேராட்ச் ஆகும் பிறகு என்ன செலவுதான்! அப்படியே செலவு செய்து டிஸ்பிளேவை சரி செய்தாலும் போனுக்கு பழைய மவுஸ் இருக்காது.

இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஃபிரென்செலை பாதுகாப்பான மொபைல் கேஸை வடிவமைத்துள்ளார். ஜெர்மனியின் ஆலன் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் பிலிப் ஃபிரென்செல், ஆசையாக வைத்திருந்த ஐபோன் கீழே விழுந்து சேதமடைந்திருக்கிறது. போனை சரிசெய்ய அதிகளவு செலவு செய்த போதிலும் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து தான் ஏர்பேக் மொபைல் கேஸை அவர் வடிவமைத்துள்ளார். இந்த மொபைல் கேஸில் போன் கீழே விழுவதை உணரும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. போனின் 4 மூலைகளிலும் சிலந்தியின் கால்கள் போன்ற எட்டு ஸ்பிரிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. போன் கீழே விழும் போது சென்சார் அதை உணர்ந்து ஸ்பிரிங்குகளை விடுவிக்கும். ஸ்பிரிங்குகள் எதிரெதிர் திசையில் விரிவடைவதால் போன் நேரடியாக தரையில் படாமல் பாதுகாக்கப்படும். பிலிப்பின் இந்த கண்டுபிடிப்பு செல்போன் பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தி ஜெர்மன் சொசைட்டி ஆஃப் மேக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் இந்த கண்டுபிடிப்புக்காக பிலிப் ஃபிரென்செலுக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்த மொபைல் கேஸ் விரைவில் உரிமம் பெற்று சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இதன்விலை 500 டாலர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!