செவ்வாய் கிரகத்தில் பனி

செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை அடைந்த இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு பெருஞ்சாதனையின் சிறப்புக் கொண்டாட்டத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன இப்புகைப்படங்கள். மார்ஸ் எக்ஸ்பிரஸின் உயர் துல்லியம் மிக்க ஸ்டீரியோ ஒளிப்படக்கருவி மூலம் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கோரோலோவ் பள்ளத்தின் ஐந்து வெவ்வேறு புகைப்படங்களை இணைத்து ஒற்றைப்படமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் இது. பெரும் பள்ளம் குறித்தும் அதைச் சுற்றி நடப்பது குறித்தும் பல்வேறு விபரங்களை தெரிந்துகொள்ள ஐரோப்பிய விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்ட மார்ஸ் மிஷனின் பணிகள் உதவுகின்றன.

கோரோலோவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடக்கு தாழ்நிலப்பகுதியில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இப்பெரும் பள்ளம் பனியால் நிறைந்ததல்ல, பனிக்கட்டிகளால் நிறைந்தது. பள்ளத்தின் மையத்தில் பெரும் பனிக்கட்டிகள் உள்ளன. அதாவது சுமார் 1.8 கிலோமீட்டர் அடர்த்தியுடன் இப்பனிக்கட்டிகள் உள்ளன.

கோரோலோவ் பள்ளத்தின் மிகவும் ஆழமான பகுதிகளில் பனிக்கட்டிகள் இருப்பதால் இதன் மேற்புறத்தில் காற்று செல்லும்போது அவை பனிக்கட்டிகளின் மேல் அப்படியே படர்ந்து ஓர் அடுக்காக உருவாகிவிடுகிறது.

பாதுகாப்பு அரணாக இந்த அடுக்கு செயற்படுவதால் பனிக்கட்டிகள் அதே நிலையில் இருக்கின்றன. மேலும் வெப்பமாவதில் இருந்தும் தடுக்கப்படுகின்றது. காற்று ஒரு மோசமான வெப்பக்கடத்தியாக இருப்பதால் கோரோலவ் பள்ளம் நிரந்தரமாகவே பனிக்கட்டிகளால் நிறைந்திருக்கிறது என விளக்கம் அளித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி மையம்.

Sharing is caring!