ட்விற்றரின் புதிய தடையால் இலங்கையில் திக்குமுக்காடும் அரசியல் பிரபலங்கள் : ஜெக் டோர்சி

தனது வலைத்தளத்தின் மூலம் அனைத்து அரசியல் பிரச்சாரங்களையும் நிறுத்த ட்விற்றர் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் ட்விற்றரின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) ஜெக் டோர்சி தெரிவிக்கையில், ஒன்லைன் விளம்பர பிரசார நடவடிக்கை மூலம் விளம்பரதாரர்களுக்கு பலன் கிடைக்கின்ற போதிலும், உலகளாவிய அரசியலில் இதனை பயன்படுத்தப்படுவது மிகவும் ஆபத்தானதாகும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணம் செலுத்தி அத்தகைய செய்திகளை வழங்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

இணையத்தின் மூலம் இடம்பெறும் அரசியல் பிரச்சாரத்தின் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவை நம்பகமானதல்ல எனவும் ட்விற்றரின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெக் டோர்சி தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சியும் தனது பிரதிவாதியை தாக்குவதற்காக, பொய்யான தகவல்களைப் பரப்பவோ, அவ்வாறான விளம்பரங்களைக் பார்வையிடுவதற்காக மக்களை கட்டாயப்படுத்தவோ பணம் செலுத்தும் நிலையில், அரசியல் கட்சிகள் எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும் எனும் நிலைப்பாட்டை எமது நிறுவனம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் பிரச்சாரங்கள் மேற்கொள்வது தொடர்பில் தமது வலைத்தளத்தில் எவ்வித தடையும் மேற்கொள்ளப்படாது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்ததன் பின்னணியில் ட்விற்றர் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசியல் விளம்பரம் தொடர்பான ட்விற்றரின் தடை, எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ளதோடு, இது தொடர்பான முழு விபரம் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இது கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக ஒரு சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை நியாயப்படுத்தி பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இலங்கையில் தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பாதிக்காத போதிலும், குறிப்பாக அமெரிக்காவில் 2020 இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்தே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2020 நவம்பர் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கையில் தற்போதும் ட்விற்றரில் பலரும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

ட்விற்றர் நிறைவேற்று அதிகாரியின் இந்த அறிவிப்பினால், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் திக்குமுக்கு ஆடியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.

Sharing is caring!