தகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக கடந்த 2008 ஆம் ஆண்டில் சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நிலவில் அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர்.

இந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளைக் கொண்டது. இந்த 3 பகுதிகளிலும் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணுக்கு புறப்பட்டது.

கடந்த 2 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அமைப்பு தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்தது. 2 தடவை விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப் பாதை குறைக்கப்பட்டு நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியானது.

இதனையடுத்து, விக்ரம் லேண்டர் 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.