நாளைய தினம் வானில் நிகழப் போகும் இன்னுமொரு அதிசயம்…!! பார்ப்பதற்கு தயாராகும் இலங்கையர்கள்..!!

இலங்கையில் தெளிவாகப் பார்க்கக் கூடிய சூரிய கிரகணம் ஒன்று நாளை (26) இடம்பெறவுள்ளதாக இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதிக்குப் பின்னர், இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.இலங்கை நேரப்படி, காலை 8.09 முதல் 11.25 வரையான மூன்று மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் இக்கிரகணம் நிகழுகின்ற போதிலும் காலை 9.35 முதல் காலை 9.37 வரையான காலப்பகுதியே உச்ச நிலையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் நாளை இடம்பெறும் இந்த கங்கண, பகுதியளவிலான சூரியக் கிரகணம் இலங்கையின் ஊடாகப் பயணிக்கும் போது பூமியின் மேல் விழும் சந்திரனின் முழுமையான நிழல் 128 கிலோ மீற்றர்கள் விட்டத்தைக் கொண்டிருக்கும். புவியின் சுழற்சி காரணமாக பூமியின் மேற்பரப்பின் மேல் வேகமாகப் பயணம் செய்வதோடு அதன் பயணப்பாதை இலங்கையின் வடபகுதி ஊடாக அமைந்திருக்கும்.மன்னார் முதல் திருகோணமலை வாகரை வரை வரையப்படும் கோட்டிக்கு மேலாக யாழ்ப்பாணம் வரை உள்ளவர்களுக்கு இச்சூரிய கிரகணத்தை தெளிவாகவும் அதன் கீழான காலி, ஹம்பாந்தோட்டை வரை உள்ளவர்களுக்கு பகுதியளவிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்ணியல் விஞ்ஞான மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை காலை 8.09 மணியளவிலும் காலை 9.35 முதல் 9.37 வரையான காலப்பகுயில் கங்கண சூரிய கிரணத்தை அவதானிக்கலாம்.கொழும்பு நகரில் காலை 8.10 தொடக்கம் பகுதியளவிலான சூரிய கிரகணத்தை பார்க்கலாம். காலியில் காலை 8.11 முதல் அவதானிக்கலாம். அவ்வேளை சூரியன் சந்திரனால் 87.6 வீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணம் முற்பகல் 11. 22 முடிவுறும் எனவும் அவர் கூறினார்.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்கவென வடபகுதியில் மாத்திரம் சுமார் எட்டு தொலைநோக்கு காட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.எனவே, புதுநிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது, பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன.நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர, மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.கதிரவ மறைப்பின் போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால், மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போவதாகவும் வானியல் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Sharing is caring!