நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இறுதி நிலையை கடந்தது சந்திரயான்-2

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் ஐந்தாவது மற்றும் இறுதி நிலையை கடந்து முன்னேறியுள்ளது.

விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தவாறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.21 மணிக்கு இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ஏவுகணை மூலம் கடந்த மாதம் 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலம், ஓகஸ்ட் 14ஆம் திகதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து ஓகஸ்ட் 20ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.

இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் நிலவின் இறுதிச்சுற்றான 5ஆவது நிலையைக் கடந்து இன்று முன்னேறியுள்ளது. நாளை இரண்டாக பிரியும் சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டப்படி செப்டம்பர் 7ஆம் திகதி அதிகாலை 1.55 மணியளவில் நிலவில் தரை இறக்கப்படவுள்ளது.

விண்கலத்தின் இயங்கு பகுதி சந்திரனுக்கு அருகாமையில் சுற்றிவர, அதிலிருந்து விக்ரம் தரையிறங்கும் பகுதி பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கவுள்ளது.

விக்ரம் தரையிறக்கப் பகுதியில் இருந்து ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப் பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வினை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!