நிலவின் தென் துருவத்தின் இருப்பது என்ன? விரைவில் துலங்குமா மர்மம்..? இன்று விண்ணில் சீறிப் பாயும் சந்திராயன் 02 !!

சந்திரனில் இதுவரை எவரும் இறங்காத தென்துருவத்தை நோக்கிய பயணம் இது. நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பதை ஆராய்வதே சந்திராயன் 2 திட்டத்தின் நோக்கம்.அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் சாதனையாக அமையும் சந்திராயன் 2 விண்கலம் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது.

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க ரூபா 1000 கோடி செலவில் சந்திராயன் 2 திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்த விண்கலத்தை தயார் செய்துள்ளது. இதன்படி இன்று விண்ணுக்கு சீறிப் பாய்கிறது சந்திராயன் 2 விண்கலம். இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது. அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ அப்போது முடிவு செய்து அதற்கான பணியைத் தொடங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், கடந்த 15ஆந் திகதி அதிகாலை சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற ​ரொக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்ட போது, தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திராயன் 2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. தொழிநுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதால் இன்று 22ஆம் திகதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. நிலவில் தண்ணீர் இருப்பதை கடந்த 2008ஆம் ஆண்டு விண்ணில் செலுத்திய சந்திராயன் 1 ​ரொக்கெட் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்து விட்டனர். அதன் அடுத்த கட்டமாக, நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கவே ரூ.1000 கோடி செலவில் சந்திரயான் 2 திட்டத்துக்கு இந்தியா மேற்படி விண்கலத்தை தயார் செய்துள்ளது.

சந்திராயன் 2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 என்ற ​ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அடுத்தடுத்து 5 தடவை இந்த விண்கலத்தை ஏவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. தற்போது சந்திராயன் 2 விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து மீண்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. ரொக்கெட் பறக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.59 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்111ரொக்கெட் அந்த விண்கலத்தைச் சுமந்து சென்று விண்ணில் 170 கிலோ மீற்றர் தொலைவில் நீள்வட்ட சுற்றுபாதையில் கொண்டு போய் விடும்.

அதன் பிறகு சுமார் 40 ஆயிரத்து 400 கிலோ மீற்றர் தொலைவுக்கு சந்திராயன் -2 விண்கலம் பயணத்தை மேற்கொள்ளும். நிலவின் அருகில் இந்த விண்கலம் நெருங்கிச் செல்ல 54 நாட்கள் தேவைப்படும் என்று முதலில் விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது சந்திராயன் 2 விண்கலத்தின் பயண நாளை 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர். செப்டெம்பர் மாதம் நிலவில் சந்திராயன் 2 தரை இறக்கப்படும். திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் சந்திரயான் 2 தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். அதற்கேற்ப சூரியஒளி சந்திரனின் தென்பகுதியில் வரும் நாட்களை கணக்கில் கொண்டு இன்று 22ஆந் திகதி சந்திராயன் 2 விண்ணில் பாய்கிறது.

நிலவில் தரை இறங்கிய பிறகு ஓரு வருடத்திற்கு சந்திராயன் 2 விண்கலம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்புகளை தினமும் படம் எடுத்து சந்திராயன் 2 விண்கலம் அனுப்பி வைக்கும். இதன் மூலம் நிலவில் மனிதர்கள் குடியேற முடியுமா? நிலவில் எத்தகைய தாதுப் பொருட்கள் உள்ளன? என்பதையெல்லாம் இந்தியாவினால் கண்டுபிடிக்க முடியும். சந்திராயன் 2 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படும் நிலையில் மீண்டும் தொழிநுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கி விட்டது.”அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. எனவே ஏற்கனவே ​ரொக்கெட்டில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு மீண்டும் ஏற்படாது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை” என திட்டவட்டமாகக் கூறினார் சிவன்.

“இதுவரை யாருமே இறங்கி ஆராய்ச்சி செய்யாத நிலவின் தென்துருவத்தில், சந்திராயன் 2 இறங்க உள்ளது. நிலவில் யாரும் செல்லாத இடத்திற்கு சந்திராயன் 2 செல்வதால், பல முன்னோடி அறிவியல் சோதனைகளை நடத்த வாய்ப்பு உருவாகும்” என்றார் அவர். ”சந்திராயன் 1 நிலவிற்கு சென்ற போது சந்திரனில் நீர் இருப்பதைக் கண்டறிந்து தெரிவித்தோம். தற்போது சந்திராயன் 2 மூலம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வாய்ப்பு உள்ளது” எனக் குறிப்பிட்டார் இஸ்ரோ தலைவர் சிவன். நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது? இந்த ஒரு கேள்விதான் சந்திராயன் 2 திட்டம் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திராயன் 1 திட்டம் வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் கூட சந்திராயன் 1 தான் கண்டுபிடித்தது. அதன் பின்பே நாசா அதை உறுதி செய்தது. இந்த நிலையில் தான் சந்திராயன் 2 நிலவின் தென்பகுதியை குறி வைத்து இருக்கிறது.

நிலவின் தென் பகுதியில் என்ன இருக்கிறது? அதன் இருளான இடங்களில் என்ன காணப்படுகிறது? இதனையெல்லாம் நிலவில் இறங்கி சோதனை செய்யப் போகிறது பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவுகிறது விக்ரம் என்ற ‘லேண்டர்’ கருவி. மூன்று முக்கிய சாதனங்களை சந்திராயன் 2 சுமந்து செல்கிறது. இந்தியா முதன் முறையாக இவ்வாறு ரோவர் அனுப்புவது குறிப்பிடத்தக்கது. ’ஓர்பிட்டர்’ எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் செய்மதி போன்ற கருவியும் இவற்றில் ஒன்றாகும். செப்டம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் ‘பிரக்யான் ரோவர்’ நிலவில் தரையிறங்கும். இதேவேளை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார் மயில்சாமி அண்ணாதுரை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விண்ணில் பாய உள்ள சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட உதவியாக இருக்கும். விண்ணில் சுற்றுலா செல்லவும் இது உதவி புரியும். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் ஆம்ஸ்ட்​ரோங் இறங்கிய அதே தென்துருவத்தில், நமது சந்திராயன் 2 விண்கலம் யாருமே இதுவரை யாருமே இறங்கி ஆய்வு செய்யாத இடத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பது மிக முக்கிய தருணம்” என்றார் என அரச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!