பின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் – மகளிர் தின ஸ்பெஷல்

திக்கெட்டும் பறந்து சென்று திறமை காட்டுவதிலும், கற்றுத்தேர்ந்த அறிவால் கடைசி மனிதனின் வளர்ச்சிக்காக உழைப்பதிலும், ஆணென்ன, பெண்ணென்ன… அனைத்தும் ஒன்றே என்று கருவறை தொடங்கி, கல்லறை வரை சுமந்து கொண்டிருக்கும் பெண் இனம், ஆயிரம் உணர்ச்சிகளையும் அடித்து நொறுக்கி ஆறு போல் பாய்ந்து செல்கிறாள்.

இன்று (மார்ச் 8) உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டாலும், இன்னமும் ஒவ்வொரு துறையிலும், முன்னேறி வர பெண்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர். சினிமா துறையில், திரைக்குப் பின்னால் பணிபுரியும் சிலர், தங்கள் துறையில் எப்படி சாதித்தனர்? என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ…
பிஆர்.விஜயலட்சுமி – இயக்குனர், ஒளிப்பதிவாளர்

198௦-ல் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். நான் வந்த சமயத்தில் பெண்கள் யாரும் காமிரா பக்கம் வரவில்லை.

என் அப்பா பிஆர்.பந்துலு நல்ல படங்களை கொடுத்தவர். அவரின் மகள் என சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது. 1995-ல் பாட்டுபாடவா படத்தில் இயக்கம், ஒளிப்பதிவு உட்பட அனைத்தும் நானே செய்தேன். சிறு இடைவெளிக்கு பிறகு இப்போது நான் இயக்கிய அபியும் அனுவும் படம் வெளிவர இருக்கிறது.

எல்லா துறையிலும் பெண்கள் முன்னேறி வந்து கொண்டு இருக்கிறார்கள். அதேசமயம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்டும் கொடுமைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கீதா குரப்பா- சவுண்ட் என்ஜினியர்

டெலி கம்யுனிகேஷன் சவுண்ட் அண்ட் டிவி படிப்பை முடித்தேன். பகவத் கீதா என்ற கன்னட படத்தில் சவுண்ட் என்ஜினியராக அறிமுகமானேன். தேசிய விருது கிடைத்தது. இது வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளேன். ஆண்கள் அதிகமாக இருக்கும் இந்த துறையில் இன்னும் அதிகமாக பெண்கள் வர வேண்டும்.
ரவீணா – டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை

இரண்டு வயதில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனேன். ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் ஹீரோயினாக நடித்தேன். இதுவரை, நயன்தாரா, எமி ஜாக்சன், அமைரா தஸ்தூர் போன்ற பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளேன். அம்மா ஸ்ரீஜாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான். அசின், நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பலருக்கு குரல் கொடுத்தவர்.

டப்பிங்கிற்கு நிறைய பெண்கள் வருகிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், திறமைகளை பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
கலா – நடன இயக்குனர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளேன். நைஜிரியா தவிர அனைத்து நாடுகளுக்கும் சென்று 3000க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளேன்.

ஆரம்பகாலத்தில் படப்பிடிப்பு தளத்தில் இரண்டு பெண்கள் மட்டுமே இருப்பார்கள். இப்போது 20 பேரில் 10 பேர் பெண்களாக இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

பெண்கள் மனதளவில் தைரியமானவர்கள். போராடி திறமைகளை வெளிக்கொண்டு வர நினைப்பவர்களுக்கு சினிமா துறை வர பிரசாதம்.
பவதாரிணி – பாடகி மற்றும் இசையமைப்பாளர்

அப்பா இளையராஜாவின் இசையை கேட்டு தான் வளர்ந்தேன். பாரதி படத்தில் பாடிய மயில் போல பெண்ணு பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ், தெலுகு, ஹிந்தியில் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். பாடுவதற்கு நிறைய பெண்கள் வந்தாலும் இசை அமைக்க ஒரு சிலர் மட்டுமே இந்த துறையில் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கேன் வி ஹியர் தி வேர்ல்ட் என்ற ஒரு பாடலை எழுதி, இசையமைத்துள்ளேன்.
உமாதேவி – பாடலாசிரியை

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பணி புரிந்து வருகிறேன். முதல்படமான மெட்ராஸ் நல்ல பெயரை தந்தது. கபாலி படத்தில் இடம்பெற்ற மாயநதி பாடல், மேலும் ஒரு படி உயர்த்தியது.
சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் வெகு சிலரே உள்ளனர். சிலர் மட்டும் தான் பெண்களை சினிமாவில் பாட்டு எழுத வைக்கின்றனர். இன்னும் பெண்களுக்கு அங்கீகாரத்தை தரவில்லை என்று தான் நினைக்கிறேன்.

நான் பாடல் எழுத இரவெல்லாம் தூங்குவதில்லை, கடும் உழைப்பை போட்டு திறமைகளை வெளி கொண்டு வர போராடுகிறேன். இங்கே பெரும்பாலும் வணிகமயம் தான். தமிழுக்கோ, தமிழ் வார்த்தைகளுக்கோ இடம் இல்லை. பெண்கள் எல்லாவற்றையும் வாசித்து பழக வேண்டும்.

சமூகத்தில் பெண்களுக்கான அங்கீகாரம் ஒரு நாளில் கிடைத்து விடாது.
அதிதி – தயாரிப்பு நிர்வாகி

தமிழ் சினிமாவில் பதினோரு ஆண்டுகளாக உள்ளேன். சிங்கம், அயன், கோச்சடையான், தனி ஒருவன் இப்படி பல படங்களில் விளம்பரம், டிஸ்ட்ரிபியூஷன், தயாரிப்பு நிர்வாகம் வேலை பார்த்துள்ளேன். நேரம் காலம் பார்க்காத வேலை இது. என்னை போன்று இப்பொது நிறைய பேர் இந்த துறைக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
பூர்ணிமா – உடை அலங்கார நிபுணர்

கார்மென்ட்ஸ் தான் எங்கள் தொழில். இயக்குநர் பாலா தான் பரதேசி படத்தில் முதல் வாய்ப்பு தந்தார். தேசிய விருதும் கிடைத்தது.

சினிமாவுக்கு வந்த பிறகு, நேரம் காலம் பார்க்க முடியாது. எல்லா துறையிலும் இருக்கிற மாதிரி இங்கும் சில டென்ஷன் இருக்கும். எனக்கு அது பழகிவிட்டது. பெண் உடை அலங்கார நிபுணர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் வர வேண்டும்.
ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன் – கலை இயக்குனர்

நான் இந்த துறைக்கு வந்து ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வனமகன் தான் என் முதல் தமிழ் படம். கலை இயக்குநர் வேலை சுலபம் கிடையாது. செட் வேலையின் போது பல இடங்களில் கூச்சம் பார்க்காமல் ஏறி இறங்க வேண்டும்.

இந்த துறையை பொறுத்தவரை பெண்களின் வருகை குறைவு தான். நாம் எப்படி பேசி பழகுகிறமோ அதை வைத்து தான் நம்மை எடை போடுவார்கள். தேவையில்லாத விஷயங்களை பேசாமல் இருந்தாலே போதும் பிரச்னைகள் வராது. உங்களுக்கு நீங்களே சிறந்த பாதுகாப்பு.
கவிதா – டச் அப் உதவியாளர்

சினிமாவில் ஆரம்பத்தில் ஆர்ட்டிஸ்ட் உதவியாளராக வந்தேன். நடிகைகளுக்கு ஆடை, டச்சப் போன்ற வேலைகளை செய்வேன். இந்த துறையை பொறுத்தவரை எனக்கு சந்தோசமாக உள்ளது. நான் படிக்கவில்லை, சினிமாவிற்கு வந்து நிறைய கற்று கொண்டேன். பாதுகாப்பாகத்தான் உணருகிறேன்.

எனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறது. அதனால் எங்கும் போகவில்லை, என் குடும்பத்தில் பலரும் ஹேர் டிரஸ் மற்றும் மேக் அப் வேலை பார்க்கிறார்கள்.

Sharing is caring!