மடிக்கக்கூடிய ஐபோன் வரவுள்ளது

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ் என இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் விண்ணப்பித்திருக்கும் படிவத்தில் ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. காப்புரிமை விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கீல் (ஹின்ஜ்) வடிவமைப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி மடிக்கக்கூடிய ஐபோனில் கீல் மூலம் மடங்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை சிறிதளவு சூடாக வைக்க சாதனத்தின் உள்புறம் சூடேற்றும் அமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் டிஸ்ப்ளேக்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.குளிர்ச்சியாக இருக்கும் நிலையில் டிஸ்ப்ளேக்கள் மடிக்கப்படும் போது அவை உடையாமல் இருக்க அவை சிறிதளவு சூடேற்றப்படும் என ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.

மடிக்கக்கூடிய பகுதி இலுமினேட்டிங் பிக்சல்கள் மூலம் தானாக சூடேற்றப்படும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.காப்புரிமை விண்ணப்பத்தில் இருக்கும் வடிவமைப்பு ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோனில் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

தற்சமயம் வெளியாகி இருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தை ஆப்பிள் டிசம்பர் 2017 இல் சமர்பித்து இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது மடிக்கக்கூடிய ஐபோனினை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sharing is caring!