மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும்

உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உணவுச் சங்கிலியில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. தானியங்கள், மலர்கள், பயிர்கள் ஆகியவற்றின் விளைச்சலுக்கு தேனீக்கள் பெரும்பங்காற்றுகின்றன.

தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், மற்ற பூச்சிகள் கட்டுக்கடங்காத பசிக்குள்ளாகுமெனக் கவலைப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.

உலக வெப்பம் அதிகரிக்கும்போது அது பூச்சிகளின் வளர்ச்சியை பாதிக்கும். தாய்லாந்து விவசாயிகளுக்குப் பெரும் துன்பமான ஆண்டு 2016ஆம் ஆண்டு. கடுமையான வெப்பமும், வறட்சியும் தண்ணீர் விநியோகத்தைப் பாதித்தது.

குறைவான தண்ணீர் பாய்ச்சி, குறைந்த காலத்தில் மகசூல் தரும் தானிய ரகங்கள் பயிரிடப்பட்டன. ஆனால், அவற்றுக்குப் பூச்சித் தாக்குதலைச் சமாளிக்கும் ஆற்றல் குறைவு.

சென்ற ஆண்டு அமெரிக்காவிலும், கனடாவிலும் நிலைமை மோசம். பசுமையான காடுகளே பட்டுப் போயின. உலகில் அதிகரித்து வரும் வெப்பம் பயிர்களின் விளைச்சல் மீதும், பூச்சிகள் மீதும் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய முடிவெடுத்தனர் விஞ்ஞானிகள்.

தானியக் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகும் பருவத்தில் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. அதனால், விளைச்சலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

உலகில் அதிகரிக்கும் ஒவ்வொரு டிகிரி வெப்பத்தாலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றின் மகசூல் ஐந்திலிருந்து 15 விழுக்காடு வரை குறையும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

ஆனால், இந்த ஆய்வு மிகப் பொதுப்படையானது. குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் ஆய்வு செய்யாமல், உலக அளவில் ஆய்வை விரிவுபடுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Sharing is caring!