மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்க அதிபர்..!! காரணம் என்ன ??

வௌவால்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என்றும் சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் தப்பித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் ஹூபே மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவியது. சீனாவில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அங்கு 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுவரை சீனாவின் வுகான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் அறிவித்திருந்தது.

இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வுகான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான கருத்தையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவி்க்காமல் இருந்தார்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பிடம் நேற்று கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து பரவியதாக செய்திகள் வெளியாகியுள்ளது, அது குறித்து அமெரிக்கா விசாரிக்க திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதில் வழங்கிய அவர், “ நாங்கள் தொடர்ந்து அந்த செய்திகளை கவனித்து வருகிறோம், ஏராளமானோரும் இதைக் கவனித்து வருகிறார். நிச்சயம் இது அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. குறிப்பிட்ட வகை வௌவால்கள் பற்றித்தான் கொரோனா வைரஸோடு தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்.

ஆனால், அந்த வகை வௌவால்கள் அந்த பகுதியிலேயே இல்லை. இதை உங்களால் நம்பமுடிகிறதா. அந்த வகை வௌவால்கள் வுகானின் ஈரமான விலங்குகள் சந்தையிலும் விற்கப்படவில்லை. சீனா குறிப்பிடும் அந்த குறிப்பிட்ட வகை வௌவால்கள், அந்த இடத்திலிருந்து 40 மைல்களுக்கு அப்பால்தான் வசிக்கின்றன.

இந்த விஷயத்தில் ஏராளமான புதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. அது என்ன என்பதை கண்டுபிடிப்போம். நான் சொல்வதெல்லாம் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கட்டும், சீனாவிலிருந்து கூட வந்திருக்கட்டும், ஆனால் இன்று அந்த வைரஸால் 184 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வுகானில் உள்ள 4-ம் கட்ட அதிநவீன பாதுகாப்பு ஆய்வகங்களுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது, ஆனால், ஒபாமா அரசு மட்டும் அப்போது 37 லட்சம் டொலர்கள் நிதியுதவி வழங்கியது.

சீனாவுக்கு தொடர்ந்து ஆய்வகங்கள் நடத்த உதவி அளிக்கக் கூடாது என எம்.பி.க்களும், செனட்டர்களும் கேட்டுக்கொண்டதால் உதவி நிறுத்தப்பட்டது” என்று பதில் வழங்கியுள்ளார்.

இதேவேளை, ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில், கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகர ஆய்வுக்கூடங்களிலிருந்து தப்பியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரித்து வருகிறது.

அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக தகவல்களை ரகசியமாகச் சேகரித்து வருகிறது. விரைவில் அதுகுறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

Sharing is caring!