முதன்முறையாக அமெரிக்காவில் வாடகைத்தாய் மூலம் பிறந்த சிறுத்தைக் குட்டிகள்..!!

உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் வாடகைத்தாய் மூலம் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் பிறந்துள்ளன.

குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாதவர்கள் செயற்கைக் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் என பல்வேறு முறைகளில் தங்கள் வாரிசுகளை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் இதுவரை இத்தகைய மருத்துவ முறையிலான கருத்தரித்தல் மனிதர்களிடம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில் தற்போது உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கும் வாடகைத்தாய் மூலம் குட்டிகள் பிறக்க வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் டெலாவேர் கவுண்டியில் உள்ள கொலம்பஸ் உயிரியல் பூங்காவில் தான் இந்த சாதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் கிபிபி என்ற 6 வயது சிறுத்தை ஒன்று உள்ளது. ஒரு சில காரணங்களால் கிபிபியால் தாய்மை அடைய முடியாது என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் கிபிபியின் வாரிசுகளை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கிபிபியின் சினை முட்டைகள் முதலில் பிரித்து எடுக்கப்பட்டது. பின்னர் அது ஆய்வகத்தில் வைத்து கரு உற்பத்தி செய்யப்பட்டு, வெறொரு பெண் சிறுத்தையின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டது. ஆனால் முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில் தான், கடந்த நவம்பர் மாதம் மூன்றாவது முறையாக இஸ்ஸி என்ற 3 வயது பெண் சிறுத்தையின் கருப்பைக்குள் கிபிபியின் சினை முட்டைகள் வைக்கப்பட்டது. சிறுத்தைகளின் கர்ப்ப காலம் 90 முதல் 95 நாட்கள் ஆகும்.

அதன்படி இம்முறை இந்த வாடகைத்தாய் சோதனை முயற்சி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ஸிக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு சிறுத்தைக் குட்டிகள் பிறந்துள்ளன. இதனை கொலம்பஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த உயிரியியல் பூங்காவின் விலங்கு சுகாதார துணைத் தலைவர் டாக்டர் ராண்டி ஜங்கே கூறுகையில், “இந்த சோதனை முயற்சிக்கு கிடைத்த வெற்றி, இனி எதிர்காலத்தில் உயிரினங்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் விலங்குகளுக்கும் வாடகைத்தாய் திட்டம் என்பதன் மூலம் பல அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க இயலும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!