வெள்ளியை மாற்றி விட்ட மர்மமான நிகழ்வு!!!

உயிர்கள் வாழ ஏற்ற சூழல்களுடன் வெள்ளி கிரகம் இருந்ததாகவும், மர்மமான ஒரு நிகழ்வுக்குப் பிறகு அந்தக் கோளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள கோள் வெள்ளி. வீனஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. அதன் வளிமண்டலம், பூமியைக் காட்டிலும் 90 மடங்கு திடமானது. சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால் அந்தக் கிரகத்தின் மேற்பரப்பு வெப்ப நிலை 864 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இந்த அளவு வெப்பம் எஃகையே உருக்கி விடும். உருவில் ஒரே மாதிரியாக இருப்பதால், பூமியும், வெள்ளியும் இரட்டையர் எனச் செல்லமாக அழைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் வெள்ளி கோளுக்கு அருகில் கூட செல்ல முடியாத என்ற நிலையில், அங்கு 700 முதல் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் 68 டிகிரி பாரன்ஹீட் முதல் 122 பாரன்ஹீட் வரையிலான வெப்பம் மட்டுமே நிலவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியுயார்க்கில் உள்ள ஃகாட்டார்ட் இன்ஸ்டிடியூட் (Goddard institute) நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

300 கோடி ஆண்டுகள் வரை, அந்தக் கோளில் பெருங்கடல் மற்றும் நீர் இருந்திருக்கலாம் என்றும், உயிர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வெப்பநிலை இருந்திருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஏதோ ஒரு மர்மமான நிகழ்வு தான், அதன் வளிமண்டலத்தை பாதித்து விட்டதாக ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதோ ஒரு நிகழ்வு பாறைகளில் இருந்து கார்பன் டை ஆக்சைடை, நைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது எரிமலை வெடிப்பாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!