ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் கருவி..!!!

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான மாற்றுவழிமுறைகளை உருவாக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தை தணிக்க போராடும் மருத்துவர்களுக்குத் தேவையான உதவிப் பொருட்களின் தட்டுப்பாடுகளும் குறைந்துவருகின்றன. இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மும்பை பேராசிரியர் சந்தோஷ் போத்தே வழி நடத்துதலில், மாணவர் களான ரேஷ்மி சக்கரவர்த்தி, பிரியங்கா சவுகான், பிரியா கார்க் ஆகியோரும் இணைந்து கொரோனா வைரஸ் கண்டறிவதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவர்கள் காப்புரிமை பெற்ற, ஏ.ஐ. என்று சொல்லப்படக் கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்தக் கருவியுடன், ஸ்மார்ட் போனை பயன்படுத்தி, குரல் அடிப்படையிலான சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த கருவி, ஒரு செயலி (ஆப்) மூலம் குரல் அடிப்படையில் ஆய்வு செய்து கொரோனா வைரசை கண்டுபிடித்து விடுகிறது. இவர்கள் கண்டுபிடித்துள்ள கருவியை இத்தாலியில் ரோம் நகரில் உள்ள டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தில் சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே 300 பேருக்கு இந்த கருவியைக்கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதில் 98 சதவீதம் துல்லியமான முடிவு கிடைத்திருக்கிறது என்பதுதான் மகிழ்ச்சி தரக்கூடிய தகவலாக அமைந்துள்ளது

மாணவர்களின் கண்டுபிடிப்பை மேற்பார்வை பார்த்து வந்த பேராசிரியர் சந்தோஷ் போத்தே இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்,

“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், குரல் அடிப்படை யிலான செயற்கை நுண்ணறிவு கருவியை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய கருவியானது, வெற்றிகரமான செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இத்தாலியில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை வெற்றிகரமாக கண்டறிய இது பயன்பாட்டில் இருக்கிறது. இதைக் கண்டுபிடித்துள்ள மாணவர்களிடம் நோயாளிகள், மாதிரிகள் என முழு அளவிலான தரவுகளை கொண்ட மென்பொருள் இருக்கிறது.

தற்போது ரோமில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை கண்டுபிடிப்பதில் இந்த கருவி வெற்றிகரமாக உதவி வருகிறது.” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த கருவி எப்படி செயல்படுகிறது என்கிறபோது அதற்கு பேராசிரியர் சந்தோஷ் போத்தே கூறியதாவது,

“செயலியில் உள்ள மைக்கில் ஒருவர் பேசும்போது, பல்வேறு அளவுருக்களில் குரல் அதிர்வு, சத்தம் விலகல் என பல்வேறு வகைகளில் குரல் உடைகிறது.

இந்த மதிப்பீடுகள், சாதாரண நபர் ஒருவரின் மதிப்பீடு களுடன் ஒப்பிடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து காப்புரிமை பெற்றுள்ள தொழில் நுட்பம், சம்மந்தப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிகிறது” என்றார்.

ரோம் நகரில் இந்த கருவியை சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிற டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியோவானி சாகியோ, “ஆடியோ அடிப்படை யிலான நோய் கண்டறியும் கருவி, சம்மந்தப்பட்ட நபரின் குரலின் சுரத்தில் இருந்து கொரோனா வைரசை கண்டுபிடிக் கிறது.

ஒவ்வொருவரின் குரலிலும் 6,300 அளவுருக்கள் இருக்கின்றன. ஒரு சில அலகுகள் மட்டுமே, ஒரு டஜனுக்கும் குறைவானவை, தனிநபர்களை குறிக்கின்றன. அவற்றில் சளியைத்தவிர மற்றவற்றை மனித காதுகளால் வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறது.

நமது உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றும், ஒரு ஒத்ததிர்வு கொண்டவை ஆகும். எனவே நம் இதயத்திலோ, நுரையீரலிலோ சிக்கல் இருந்தால், அது நமது குரலில் பிரதிபலிக்கும்.

ஒரே நபருக்கு அவர் ஆரோக்கியமாக இருக்கிறபோது ஒரு குரல் இருக்கும். நோய் இருந்தால் வேறொரு குரல் இருக்கும்.

நுரையீரல் மற்றும் காற்று அலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துவதால், குரல் நிச்சயம் பாதிக்கப்படுகிறது. இதை வைத்து கொரோனா வைரசை கண்டறிய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!