பழைய மொபைல் எண்ணை நீங்க இப்போ பயன்படுத்தவில்லையா? உங்க பணம் பறிபோக வாய்ப்பு இருக்கு!

முன்பெல்லாம் தொலைத்தொடர்புக்கு SIM கார்டு வாங்கிய காலம் போய் இப்போதெல்லாம் புதிதாக ஆஃபர் வந்தாலே புதிதாக SIM கார்டு வாங்க ஆரம்பித்துவிட்டோம். இதனாலேயே நம் தகவலுக்கான முக்கியத்துவத்தையும் மறந்துவிட்டோம்.

புதிய எண்ணைப் பெறும்போது உங்கள் தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய தரவுக்கு என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும்பாலும் உங்கள் பழைய எண்ணை மறுசுழற்சி செய்து புதிய பயனருக்கு வழங்குகின்றன என்பதாவது தெரியுமா? அதோடு, உங்கள் பழைய எண்ணுடன், அதனுடன் தொடர்புடைய எல்லா தகவல்களும் புதிய பயனருக்கு கிடைக்கக்கூடும். இதனால் உங்கள் தகவல்களைப் பயன்படுத்தி புதிய பயனாரோ அல்லது அந்த எண்ணை கொண்டிருப்பவரோ என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.

பொதுவாக உங்கள் எண்ணை மாற்றும்போது, இ-காமர்ஸ் போர்ட்டல்கள் அல்லது டிஜிட்டல் கொடுப்பனவு தளங்களில் உள்ள எல்லா தகவல்களையும் நீங்கள் உடனே புதுப்பிக்க மாட்டீர்கள். இதை உங்கள் பழைய எண்ணை பயன்படுத்தும் புதிய பயனர் சாதகமாக பயன்படுத்திக்கொண்டால் உங்கள் தகவல்களை அவர் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் நேரலாம்.

எண்களை மறுசுழற்சி செய்யும் முழுச் செயல்முறையும் பயனர்களை பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்களுக்கு உள்ளாக்கக்கூடும் என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். “நாங்கள் ஒரு வாரத்திற்கு 200 மறுசுழற்சி எண்களைப் பெற்றுள்ளோம், அவர்களில் 19 பேர் இன்னும் பாதுகாப்பு / தனியுரிமை தகவல் (எ.கா., அங்கீகார கடவுக்குறியீடுகள், மருந்து மறு நிரப்பல் நினைவூட்டல்கள்) சம்பந்தமான அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறுகிறார்கள். இதனால் பழைய பயனரின் தரவுகள் ஆபத்தில் சிக்கக்கூடும்” என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அரவிந்த் நாராயணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு புதிய மொபைல் எண்ணை வாங்கும்போது, பழைய மொபைல் எண்ணில் பயன்படுத்தி  வந்த அனைத்து  தரவுகளையும் புது எண்ணுக்கு மாற்றிவிடுங்கள். அனைத்து பாதுகாப்பு சம்பந்தமான வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளில் இருந்து பழைய எண்ணை நீக்கிவிடுவது நல்லது.

Sharing is caring!