அல்லைப்பிட்டியில் சீன கப்பல்: தேடுகின்றது சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்களம்!

500 ஆண்டுகளிற்கு முன்பு சீன நாட்டுக் கப்பல் ஒன்று அல்லைப்பிட்டி கடற்பகுதியில் மூழ்கியதாக தெரிவித்து சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் 500 ஆண்டுகளிற்கும் முன்னர் இலங்கை கடற்பரப்பில் பயணித்த ஓர் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மூழ்கியதாகவும், அதன் எச்சங்கள் அப்பகுதியில் இருப்பதாகவும் கடந்த 1980ஆம் ஆண்டு கால பகுதியில் ஆரம்ப ஆய்வில் சீன நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அதன்போது சில சீன நாட்டு நாணயம் மற்றும் சீனக் கப்பலின் சில பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் ஆய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக குறித்த ஆய்வுப் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சீன அரசு உத்தியோக பூர்வமாக இலங்கை அரசிடம் எழுத்தில் விண்ணப்பித்து இரு நாட்டு அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தற்போது சீன மற்றும் இலங்கை நாடுகளின் தொல் பொருள் திணைக்களங்கள் இணைந்து அல்லைப்பிட்டி கடற்பகுதியில் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்

Sharing is caring!