கச்சத்தீவு விழாவுக்கு 2215 பத்தர்கள் அனுமதி. தேவசகாயம்- பிப்ரவரி 25க்குள் மனு செய்யலாம்

கச்சத்தீவு திருவிழாவுக்கு 2215 பக்தர்கள் விசைப்படகில் செல்ல உள்ளதால், அதற்கான விருப்ப மனுக்களை பிப்ரவரி 25க்குள் படகு உரிமையாளரிடம் வழங்க வேண்டும் என ராமேஸ்வரம் பாதிரியார் தேவசகாயம் தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் (22 கி.மீ.,) தொலைவில் உள்ள கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் உள்ளது. இத்திருவிழாவில் பாரம்பரியமாக தமிழக, இலங்கை மீனவர்கள் பங்கேற்று வந்த நிலையில் 1982ல் இலங்கையில் இனப்போர் தீவிரமடைந்ததும், விழாவுக்கு இலங்கை தடை விதித்தது.

பின் 2006ல் அமைதி நிலவியதும் 2010 முதல் கச்சத்தீவு திருவிழா நடத்தப்பட்டு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்தாண்டிற்கான விழா அழைப்பு கடிதத்தை யாழ்பாணம் முதன்மை குரு சேசுதாஸ் ஜெபரத்தினம் நேற்றுமுந்தினம் (23 ஜனவரி) ராமேஸ்வரம் பாதிரியார் தேவசகாயத்திற்கு அனுப்பினார். மார்ச் 15ல் கச்சத்தீவு சர்ச்சில் நெடுந்தீவு பாதிரியார் எமிலிபால் கொடி ஏற்றி விழாவை துவக்குகிறார். மார்ச் 16ல் யாழ்ப்பாணம் பிஷப் ஜஸ்டின் ஞானபிரகாசம், முதன்மை குருக்கள் மற்றும் தமிழக பாதிரியார்கள் ஒருங்கிணைந்து திருவிழா திருப்பலி பூஜைநடத்த உள்ளனர்.

விழாவில் பங்கேற்க மார்ச் 15ல் ராமேஸ்வரத்தில் இருந்து 63 விசைப் படகில் 2215 பக்தர்கள் கச்சதீவு செல்ல உள்ளனர். இதற்கான விருப்ப மனுக்களை படகு உரிமையாளரிடம் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 5க்குள் பெற்று பிப்ரவரி 25க்குள் படகு கட்டணம் நபருக்கு 1300 ரூபாயுடன் வழங்க வேண்டும்.

இது குறித்து ராமேஸ்வரம் பாதிரியார் தேவசகாயம் கூறியதாவது:

கச்சத்தீவு விழாவுக்கு வரும் பக்தர்கள் தடை செய்த பாலிதீன் பொருள்கள், போதை வஸ்துகளை எடுத்து செல்லக் கூடாது. விண்ணப்ப படிவத்தில் இணைத்த அரசு அடையாள அட்டை அசல்
எடுத்து வர வேண்டும்.

மார்ச் 16ல் கச்சத்தீவில் திருவிழா பூஜை முடிந்ததும் அங்கிருந்து பக்தர் படகில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு திரும்ப வேண்டும், என்றார்.

Sharing is caring!