கடலட்டைப் பண்ணைத் தொழிலுக்கு தடை – வேலணை பிரதேச சபையில் தீர்மானம்

கரையோர மற்றும் சிறு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சில கடற்றொழிலாளர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை பண்ணை தொழிலுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என வேலணை பிரதேச சபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (ஆகஸ்ட் 30) உபதவிசாளர் நடனசிகாமணி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது –

வேலணை பிரதேசத்தின் மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் குறித்த கடலட்டை பண்ணை தொழில் மேற்கொள்ளப்பட்டுவருவதால் கரையோர மற்றும் சிறு கடற்றொழிலை மேற்கொள்ளும் கடற்றொழிலாளர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக அத்தகைய தொழிலாளர்கள் தமது வாழ்வாதார நிலையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதால் குறித்த தொழிலை மேதற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து அதன் அனுமதி தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தற்போது அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் குறித்த தொழில் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் சில கடற்றொழில் அமைப்புக்களால் சபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது..

இதனடிப்படையில் நேற்றையதினம் சபையின் அமர்வின்போது குறித்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சபையின் உறுப்பினர்கள் பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்த நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!