நன்னீர் கிணறுகளில் -கடற்படையினர் நீர் எடுக்கத் தடை!!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மண்குழி பிரதேசத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள நன்னீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் நீர் எடுப்பதை தடை செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை சபை கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வுசபை மண்டபத்தில் தவிசாளர் ம. ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 06) இடம்பெற்றது. பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எ.ஞா.லக்ஸ்மனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

மண்குழி பிரதேசத்தில் காணப்படுகின்ற நன்னீர் கிணறுகளில் இருந்து கடற்படையினர் தினமும் பத்தாயிரம் லீற்றருக்கும் அதிகமான நீரை தங்கள் பயன்பாட்டுக்காக பவுசர்களில் எடுத்துச் செல்வதனால் நிலத்தடிநீர் வற்றி உவர்நீராக மாற்றமடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு இயலாத நிலைக்கு மாற்றமடைந்து வருகின்றது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கான நீரை பெறுவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மேற்படி தீர்மானத்தின் பிரதிகளை ஊர்காவற்றுறை பிரதேச செயலர், ஊர்காவற்றுறை கடற்படை தளபதி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Sharing is caring!