நயினாதீவில் மகுடம் சூடியது நெடுந்தீவு கிரிக்கெட் அணி

நயினாதீவில் தற்போது இடம்பெற்றுவரும் அனைத்துத் தீவகங்களுக்கும் இடையிலான கிரிக்கெற்சுற்றுத்தொடரில் முதல் சுற்றில் நெடுந்தீவு அணி அபார வெற்றியீட்டி மீண்டும் நெடுந்தீவு மண்ணுக்கு பெருமைசேர்த்துள்ளது.

துணைதலைவர் நிமால் தலைமையிலான நெடுந்தீவு அணியினருக்கும் நயீனாதீவு மத்தி அணியினருக்குமான சுற்றுத்தொடர் இன்று (ஆகஸ்ட் 18) காலை 10 மணியளவில் நயினாதீவு தில்லைவெளி மைதானத்தில் ஆரம்பமானது.

முதலில் தடுப்பெடுத்தாடிய நயினாதீவு மத்தி அணியினர் 9.2 ஓவர்களில் நெடுந்தீவு அணியின் வேகப்பந்துவீச்சாளர் வினோத்குமாரின் அபாரகரமான பந்துவீச்சில் 5 விக்கட்டுக்கள் உள்ளடங்கலாக அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 32 ஓட்டங்களில் சுருண்டது.

ஏனைய பந்துவீச்சாளர்களான டெலான்ஸ் 03 அன்ரனிதாஸ் 01 மதன் 01 விக்கட்டுக்கள் வீதம் சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெடுந்தீவு அணியினர் மூன்று விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை இலகுவில் சுவீகரித்திருந்தனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற தீவகங்களுக்கு இடையிலான கிரிக்கெற் சுற்றுத்தொடரில் நயினாதீவு புங்குடுதீவு அல்லைப்பிட்டி வேலணை ஊர்காவற்துறை தம்பாட்டி எழுவைதீவு ஆகிய அணிகளை வீழ்த்தி குறித்த நெடுந்தீவு அணியினர் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இடம்பெற்றுவரும் நயீனாதீவு தீவகச்சுற்றுக் கிண்ணத்தினை நெடுந்தீவு அணி சுவீகரிக்கும் என்பதே பலரது எதிர்பார்பாகவுள்ளது.

Sharing is caring!