நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு: உறுதியளித்தார் நிஷாந்தன்

நெடுந்தீவு வாழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடக்கம் பிரதேசத்தின் அபிவிருத்தி,மாணவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் போசாக்கு, சுயதொழில் வேலை வாய்ப்புக்கள், போக்குவரத்து வரை எமது கட்சியின் யாழ். மாவட்டக் குழுவினரால் பிரதேசசபை, மற்றும் பிரதேச சபை செயலாளரின் உதவியுடன் இனங்காணப்பட்டுள்ளது. எனவே, இந்த வருட நடுப்பகுதிக்குள் நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என ரெலோவின் வேலணைப் பிரதேச அமைப்பாளரும், முன்னாள் யாழ்.மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.நிஷாந்தன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெடுந்தீவு என்பது இலங்கையின் முக்கியதொரு சுற்றுலாத தளமாக எப்பவோ மாற்றமடைந்திருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தினாலும் அதன்பின்னர் இன்று வரை தீவகத்தை பெயரளவில் மட்டும் ஆட்சி செய்த அரசியல் வாதிகளினாலும் நெடுந்தீவை மட்டுமல்ல முழுத் தீவகத்தையும் அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர்த்தாமல் வெறுமனமே தேர்தல் வாக்கைப் பெற்றுக் கொள்வதற்காகவே தீவகத்தை பயன்படுத்தி உள்ளார்கள் என்பதே நிதர்சனம்.

எனவே நடந்தவை அனைத்தும் நடந்தவையாகவே இருக்கட்டும் இனிவரும் காலங்களில் எவ்வாறு நாம் இங்கு செயற்படப் போகின்றோம் என்பதே முக்கியமானதொரு விடயமாக காணப்படுகின்றது.

நெடுந்தீவின் வடக்கே மாபெரும் பிரசித்தமான சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரின் உதவியுடனும் செய்வதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.

இதுமட்டுமின்றி இங்கு சிறியளவிலான தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும்,தரமான உயர்தர வகுப்பு கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்,போசாக்கு நிறைந்த ஆரோக்கியமான சிறுவர்களை உருவாக்கிடவும்,சீரான முறையில் மருத்துவ சேவையினையும்,பசுமையான சுற்றுச் சூழல் கொண்ட ஒரு பிரதேசமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களையும் சம்பந்தப்பட்ட பல தரப்பட்டவர்களோடு கலந்தாலோசித்து வருகின்றாம்.

விரைவில் இத் திட்டங்களிற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்வதோடு மிக முக்கியமாக நெடுந்தீவைப் பொறுத்தவரை நாம் முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் தரப்பினரதும் பூரண ஒத்துழைப்புக்கள் காணப்படுமென எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Sharing is caring!