பொலுத்தீன் பாவனையற்ற நெடுந்தீவாக உருவக மக்கள் கோரிக்கை.

பொலுத்தீன் பாவனையை முற்றிலுமாக நெடுந்தீவிலிருந்து ஒழிப்பதற்கு நெடுந்தீவு பிரதேசசபையானது முன்வரவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபையினுடைய தீர்மானமொன்றினாடாக அமுலாக்கம் செய்வதில் அனைத்து கட்சிகளும் பிரதேச நலன்சார்ந்து இவ் உயரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.

அண்மைக் காலமாக நெடுந்தீவிற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதையடுத்து சுற்றுலாத்தளங்கள் மற்றும் குடியிருப்பற்ற பகுதிகளில் வீசப்படுகின்ற பொலுத்தீன்களை கால்நடைகள் உண்பதால் உயிரிழக்கும் நிலை உருவாகிவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பிரதேசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கடைத்தொகுதிகளில் அவற்றை விற்பதனை தடைசெய்யக்கோரியும் இதனால் பிரதேசத்தில் பொலுத்தீன் பாவனை குறைவடையுமெனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நிலத்தொடர்புகளற்ற தீவாக காணப்படுவதால் குறித்த பொலித்தீன் பாவனையின் தாக்கமானது குறுகிய காலப்பகுதியில் பல்வேறு பாதிப்புக்களை சூழலிலும் மனித சுகாதாரத்தில் உண்டு பண்ணும் என்பதும் உண்மையாகும்.

நெடுந்தீவு இறங்குதுறை மற்றும் அனைத்து சுற்றுலாத்தளங்களிலும் பொலுத்தீன் பாவனையை தடுக்கும்விதமான காட்சிப்பதாதைகளை நிறுவவும் மேற்படி இடங்களில் குப்பைத்தொட்டிகளை நிறுவுவதும் தேவையான விடயங்களாகும்.

நெடுந்தீவு பிரதேசத்தில் மக்கள் நலன்சார்ந்து இயங்குகின்ற அரச மற்றும் அரசுசார நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துளைப்புக்களுடன் தீர்மானமாகும் குறித்த செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

பொலித்தீன் பாவனை தடுப்பு தீர்மானத்தை சாவகச்சேரி மற்றும் வேலணை பிரதேசேசபை என்பன கடந்த மாதங்களில் மேற்கொண்டு குறித்த செயற்திட்டத்தை தமது பிரதேசசபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Sharing is caring!