மாடுகளைக் கடைகளில் வெட்டும் கோரிக்கையைச் சபை நிராகரிப்பு

சுகாதாரத் துறையினரின் ஆலோசனை பெறத்திட்டம்

கொள்கலங்களில் மாடுகளைக் கொல்லாது மாட்டு இறைச்சிக் கடைகளிலேயே மாடுகளை இறைச்சியாக்கப் பிரதேச சபை அனுமதிக்க வேண்டும் என்று ஈ.பி.டி.பியினர் விடுத்த கோரிக்கை சபைத் தவிசாளரால் நிராகரிக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபையின் அமர்வு சபா மண்டபத்தில் தவிசாளர் பிலிப் பற்றிக் றொஷன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) இடம்பெற்றது. அதன் போதே உறுப்பினர் இந்தக் கோரிக்கையைச் சபையில் முன்வைத்தார். நெடுந்தீவில் மாட்டிறைச்சிக் கடைக்கும் கொள்கலனுக்கும் இடையில் ஒன்றரைக் கிலோமீற்றர் தூரம் காணப்படுகின்றது. இதனால் கடைக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாடுகளைக் கொள்கலங்களில் இறைச்சியாக்காது மாட்டு இறைச்சிக் கடைகளிலேயே இறைச்சியாக்கப் பிரதேசசபை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஆதரித்துப் பேசிய அதே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் நல்லதம்பி சசிகுமார் கொள்கலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இறைச்சியாக்கக் கூடியதாக உள்ளது. இதனால் இறைச்சிக்கடைக்காரர் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடையிலேயே மாடுகளை இறைச்சியாக்க அனுமதிக்க வேண்டும் என்றார். எனினும் இதனை நிராகரித்த தவிசாளர், சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தான் கொள்கலங்களில மாடுகள் இறைச்சியாக்கப்படுகின்றன. இது தொடர்பில் சுகாதாரத் துறையினரிடம் ஆலோசனை கேட்ட பின்னர் இதனைப் பற்றிச் சிந்திப்போம். அதுவரை இதனை ஏற்கமுடியாது என்று பதிலளித்தார்.

Sharing is caring!