யாழில் தீவகங்கள் எப்படி உருவானது? (பாகம் 2)

யாழ் தீவுகள் 7 என்றும் அவற்றை சப்த தீவுகள்(சப்த என்றால் 7) என சிறப்பு பெயர் கொடுத்தும் எம் முன்னோர்கள் சிலரும் தற்கால எழுத்தாளர் சிலரும் பல கருத்துக்களை எழுதிவைத்து இருக்கின்றார்கள் .சிலவேளைகளில் முற்காலத்தில் 7 ஆக இருந்து பின்னர் பிரிந்தும் இருக்கலாம் .ஏழாக இருந்த பொழுது எழுதிய குறிப்பை வைத்து இன்றும் ஏழு என்று எழுதிக்கொண்டு இருப்பதை பார்த்து அதில் பிழை இருந்தாலும் அப்படியே எழுத வேண்டும் என்ற விதி இல்லை. அவ்வாறான தேவையும் நாளைய சமுதாயத்துக்கு இல்லை. நிரூபிக்க தகுந்த சான்று என்னிடம் இருக்கும் பட்சத்தில் நான் அதை மறுத்தும் எனது கருத்தை வைக்க பின்னிற்பதில்லை .நாளைய சமுதாயம் சிவமேனகையும் இவ்வாறான குறிப்பை ஆதரித்தே தனது கருத்தை எழுதி இருக்கின்றார் என்ற பழி சொல்லை நான் கேட்கவும் விரும்பவில்லை. அதனால் யாழ் தீவுகள் ஏழு இல்லை இப்பொழுது மொத்தம் 9 தீவுகள் என்பதை குறிப்பிடுவதோடு அவற்றிலும் 5 தீவுகள் தான் இன்று தீவுக்கான முழுமையான வரைவிலக்கணத்தை கொண்டு இருக்கிறது என்பதையும் குறிப்பிடுகின்றேன்.ஏனைய நான்கு தீவுகளும் இன்றைய நிலையில் ஏதோ ஒரு வகையில் தரையால் இணைக்கப்பட்டு உள்ளது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு உள்ளது என்ற தீவுக்கு உரிய முழுமையான அர்த்தத்தில் இருந்து விலகியே இருக்கிறது.

அந்தவகையில் முதலில் சப்த தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுகளாக வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடும்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைதீவு(காரைநகர்) இவற்றோடு ஏனையதீவுகளாக மண்டைதீவு, கச்சைதீவு இவற்றில் மண்டைதீவும், வேலணைத்தீவும், காரைதீவும், புங்குடுதீவும் தரைவழி பாதையால் ஏதோ ஒருவழியில் யாழ்பாணத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏனைய 5 தீவுகளும் இன்னும் நான்குபக்கமும் கடலால் சூழப்பட்டு எந்தவொரு தரை வழி பாதைகளாலும் இணைக்கப்படாத நிலையில் இருக்கிறது.

அடுத்து சப்த தீவுகள் எவை என்பதிலும் பல இடங்களில் தெளிவில்லாத கருத்துகள் இருக்கிறது ,மண்டைதீவு சப்த தீவுகளுக்குள் அடங்கின்றதா .காரை நகர் ஒரு தீவா? காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்க்காவர்துறை ஒரு தனித்தீவா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது .ஒல்லாந்தர் பிற்காலத்தில் பெயரிட்ட 7 தீவுகளாக நெடும்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு, காரைதீவு, வேலணைத்தீவு என்பவை இருக்கிறது .இதில் வேலணை தீவுக்குள் ஒரு கிராமமாக காவலூர் வருகின்றது இந்த காவலூர் தான் பிற்காலத்தில் ஈழத்து பூர்வீக துறைமுகம் (நயினாதீவு) சம்பு கோவளம் அழிவுக்குள்ளான பின்னர் இந்த காவலூரில் துறைமுகம் ஒன்று பாவனைக்கு வந்தது அந்த வேளையில் காவலூர் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் ஊர்காவற்துறை என்று பெயர் மாற்றம் பெற்றது .ஆனாலும் இது வேலணைதீவில் அடங்கும் 10 கிராமங்களில் ஒரு கிராமம் ஆகும். அடுத்து மண்டைதீவு இது ஒரு தனிதீவாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளது .இதை 8 தீவாக பின்னர் ஏற்றுகொள்ளபட்டு இருக்கிறது. அதனால் இது அந்த சப்த தீவுகள் என்ற 7 தீவுக்குள் அடக்கம் இல்லை. பின்னர் 1974 இல் இலங்கைக்கு இந்தியாவால் இலங்கையின் சொத்து என்று வழங்கப்பட்ட கச்சை தீவும் சேர்த்து ஈழத்தின் யாழ் தீவுகள் 9 ஆகும்.

காரைநகர் தீவா நகரா என்ற பலரது கேள்விக்கு விடையாக பின்வரும் கருத்தை முன் வைக்கின்றேன் ,தீவுகள் யாழில் இருந்து பிரிந்த பொழுது பிரிந்து காரை தீவும் உருவானது. பிரித்தானியர் ஆட்சிகாலத்தில்1869 ம் ஆண்டு அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இந்த இணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் பரிந்துரைப்பின்படி காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றி அழைக்க தொடங்கினர்.

யாழில் தீவகங்கள் எப்படி உருவானது? (பாகம் 1)

Sharing is caring!