வேலணையில் இருமாத கர்ப்பவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வேலணை 7 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து இரண்டு மாத கர்ப்பவதித் தாயொருவர் உடலில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்தைச் சேர்ந்த 38 வயதான யோகேந்திரா பத்மாவதி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் இரு கைகளிலும் 6 அங்குல நீளமான வெட்டுக்காயங்கள் பல உள்ளன.
இதனால் இவர் கொலை செய்வதற்கு முன்னர் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ளமையுயும் குறிப்பிடத்தக்கது.
வழமை போன்று நேற்று முன்தினம் இரவு உணவு உண்டுவிட்டு தூக்கத்திற்கு சென்றவரை அதிகாலை காணாது வீட்டில் இருந்தோர் தேடியுள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இவரது சடலம் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டார். சட்டவைத்திய நிபுணர் மூலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!