வேலணை வளம் சுரண்டப்படுவதை தடுப்பதற்குச்சபையில் தீர்மானங்கள்

வேலணைப் பிரதேசத்தின் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்கு நேற்றைய அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச சபையின் ஒத்தி வைக்கப்பட்ட சபை அமர்வு நேற்றுமுன்தினம் மீண்டும் நடைபெற்றது. தவிசாளர் நமசியவாய கருணாகர குருமூர்த்தி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. இந்த அமர்விலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

வளங்கம் சுரண்டப்படுகின்றன
வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மண் அகழ்வு நடைபெறுகிறது. இவ்வாறு அள்ளப்படும் மணல் வெளி இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எமது மக்களின் கட்டுமான தேவைகளுக்கும் மணல் பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.

எமது பிரதே சத்தின் வளங்கள் வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. முறையான அனுமதிகள் இல்லாமல் மணல் அள்ளப்படுகின்றது. அதே போன்று பனைமரங்களும், பூவரச மரங்களும் வெட்டப்படுகின்றன. தமது காணிகளில் உள்ள மரங்களை தேவை ஏற்படின் இதனைவெட்டிப்பயன்படுத்தலாம் ஆனால் சட்ட விரோதமாக மரங்கள் தறிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன.

வேறு தேவைகளைக் காரணம் காட்டி இங்கு வருபவர்கள் கற்றாளைச் செடிகளை வெட்டிச் செல்கின்றனர். கரையோரப் பாதுகாப்பக் கருதி இந்தச் செடிகளை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பட்டா மற்றும் முச்சக்கர வண்டிகளில் வரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கற்றாளையை வெட்டிச் செல்கின்றனர்.

இவ்வாறு தொடர்ச்சியாக வேலணைப் பிரதேசத்தின் வளங்கள் அழிக்கப்படுகின்றன. எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் கூட இந்த வளத்தை தமது தேவைகளுக்கும் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தடைசெய்யப்பட வேண்டும். உரிய அதிகாரிகளின் மூலம் இவற்றை தடை செய்வது என்று தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரும்பு சேகரிப்பு
பழைய இரும்பு சேகரிப்பதற்கு வெளியில் இருந்தும் வேலணை பிரதேசத்துக்கு வருகை தருகிறார்கள். இவ்வாறு வருபவர்களில் சிலர் கால் நடைகளை களவாடுதல் பழைய கட்டடங்களை உடைத்து இரும்பு எடுத்தல் போன்ற பல்வேறு திருட்டு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று மக்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடமும் கூட இவ்வாறு பழைய இரும்பு சேகரிக்கும் போர்வையில் வந்தவர்கள் ஒரு வீட்டில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிச் செல்ல முற்பட்ட வேளை சபை உறுப்பினரால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தது.

ஆகவே வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வெளிப் பிரதேசத்தில் இருந்து பழைய இரும்பு சேகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நேற்று ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ளவர்கள் பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்றால் சபையின் அனுமதி பெற வேண்டும் என்று தீர்மானம் கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்டது. ஆனால் இவை நடைமுறை படுத்தப்படாமை தொடர்பில் சபையில் உறுப்பினர்கள் நேற்றுக் கேள்வி எழுப்பினர்.

பொலிஸ் பற்றாக்குறை
தீவகத்தில் இவ்வாறான செயற்பாடு களுக்குத் தடை விதிக்கப்பட்டு தீர்மாலாம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு ஏனைய தரப்பினருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. தீவகத்துக்கு நுழையும் முக்கிய இடங்களில் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட வேண்டும். தற்போது கடமையில் ஈடுபடும் பொலிஸாரின் எண்ணிக்கையும் அந்த நிலையங்களால் குறைவாக உள்ளது. மக்கள் இவ்வாறான சட்ட விரோத செயற் பாடுகளைத் தடுக்கும் நோக்கில் தகவல் வழங்கினால் அவர்களை பொலிஸார் வந்து பிடிப்பதற்குள் அவர்கள் சென்று விடுகின்றனர். இது தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துத்துக் கலந்துரையாடவுள்ளேன் என்று தவிசாளர் பதிலளித்தார்.

சபையில் தீமானம் நிறைவேற்றப்பட்டால் அது நடைமுறை படுத்தப்பட வேண்டும். முதற்கட்ட நடவடிக்கையாக தீவகத்துள் நுழையும் முக்கிய இடங்கள் மற்றும் பொது இடங்களில் மறைகாணி பொருத்தப்பட வேண்டும். இங்கு தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மூன்று மொழிகளிலும் அறிவித்தல் பலகை பொருத்தப்படல் வேண்டும் என்று தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீரமைத்த வீதியில் புல்
வேலணை பிரதேசசபைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு நிதி மூலங்கள் மூலம் விதிகள் சீரமைக்கப்பட்டன. சீரமைக்கப்பட்ட மூன்று வீதிகளில் புல் முளைத்திருக்கிறது என்று சபையில் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

வேலணை பிரதேச சபையின் வீதிகள் வேறு வேறு நிதி மூலங்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறன. நிதிமூலம் வேறாக இருந்தாலும் தொழில் நுட்ப உதவியாளர் உள்பட கண்காணிப்பு வேலைகளை சபை அதிகாரிகளே மேற்கொள்ளுகின்றனர். விதிகள் போடப்படும் போது உரிய முறைகள் கையாளப்பட்டால் தார் ஊற்றி சீரமைக்கப்பட்ட வீதிகளில் புற்கள் முளைக்காது. சீரமைப்பில் தவறு நடக்கிறது என. இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குழப்ப நிலை
சபையின் அனுமதி பெறாது வந்த பார்வையாளர் ஒருவர் ஊடகவியலாளர் போன்று நடந்துகொண்டார் என்று தெரிவித்து அவர் தவிசாளரால் வெளியேற்றப்பட்டார் இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சபை அமர்வில் பார்வையாளருக்கான இருக்கையில் சமூக ஆர்வலர் இருந்து சபை நடவடிக்கைகளை தொலைபேசியில் படம் பிடித்தார். அந்தசபை அமர்வு ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்களிடம் அவர் முகநூல் செய்திக்காக காணொளி ஒன்றை சபை மண்டபத்தில் இருந்து பதிவு செய்திருந்தார். தவிசாளர் அனுமதி பெறாமல் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் கடந்த அமர்வின் பின்னர் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

நேற்றுமுன்தினம் சபை அமர்வில் அந்த சமூக ஆர்வலர் சபையில் நுழைந்தார். ஆனால், அனுமதி பெறவில்லை என்று தெரிவித்து உடனடியாக தவிசாளர் சபையில் இருந்து அவரை வெளியேற்றினார். பார்வையாளர் அல்லது ஊடகவியலாளர்கள் சபையின் அனுமதி பெற்று வர வேண்டும். ஆனால் இந்த சமூக ஆர்வலர் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதாலேயே அவர் வெளியேற்றப்பட்டார் என்று தவி
சாளர் தெரிவித்தார்.

இதனை அவதானித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தவிசாளர் கட்சி சார்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சபைக்கு வருவது வழமை. ஆகவே அந்த நபர் அனுமதி பெற்று இது பாது வரை காலமும் சபைக்கு வந்த சான்றை காட்டுமாறு கேட்டனர்.
அந்தச் சான்று இல்லை என்ற காரணத்தால் உறுப்பினர்களின்
வேண்டு கோளுக்கு இணங்க வெளியேற்றப்பட்ட சமூக ஆர்வலரை சபைக்கு அனுமதிக்குமாறு கோரி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமூக
ஆர்வலர் சபை அனுமதி பெற்று வந்த சபைக்கு அழைக்கப்பட்டார். அதன் பின்னர் சபை நடவடிக்கைகள் வழமையான முறையில் நடைபெற்றன.

Sharing is caring!